குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் நிரபராதியின் விளக்கமறியல் எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டு உள்ளது.
மாணவி கொலை வழக்கில் முதலாவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட பூபாலசிங்கம் இந்திரகுமார் ஊர்காவற்துறை நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து ஊர்காவற்துறை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் பெயரை கூறி கொலை அச்சறுத்தல் விடுத்து இருந்தார்.
அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை போலீசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர், குறித்த வழக்கு விசாரணை நேற்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது சந்தேக நபர் சார்பில் சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி முன்னிலையாகி , சந்தேக நபரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு மாணவி கொலை வழக்கில் குற்றம் இளைக்காது தண்டனை அனுபவித்து வந்தவர் என்பதனையும் கருத்தில் கொண்டு விடுதலை செய்யுமாறு விண்ணப்பம் செய்தார்.
அதனை தொடர்ந்து நீதிபதி தெரிவிக்கையில் ,
நீதிமன்றில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சந்தேக நபருக்கு விளக்கமளித்து இருந்த போதிலும் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே அச்சுறுத்தல் விடுத்துள்ளார். எனவே சட்டத்தின் பிரகாரம் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அடுத்த தவணையின் போது கட்டளை பிறப்பிக்கப்படும் நீதிவான் தெரிவித்தார். அதனை தொடர்ந்து சந்தேகபரை எதிர்வரும் 06ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அன்றைய திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார்.