166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
ஆவா குழுவின் முக்கிய சந்தேக நபரை வேண்டுமென்றே தப்பிக்க வைத்தார்கள் என சட்டத்தரணி குற்றம் சாட்டியுள்ளார். மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த ஆவா குழுவின் முக்கிய சந்தேகநபர் என காவற்துறையினரால் அடையாளப்படுத்தப்பட்டு உள்ள நிஷா விக்டர் என அழைக்கப்படும் சக்திவேல் நிஷாந்தன் (வயது 22) கடந்த 17ஆம் திகதி நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் பாதுகாப்பில் இருந்து தப்பியோடியுள்ளார்.
அந்நிலையில் தப்பியோடிய நிஷா விக்டர் என அழைக்கப்படும் எஸ்.நிஷாந்தன் சார்பில் மன்றில் முன்னிலையாகும் பெண் சட்டத்தரணி நீதிமன்ற வாளகத்தினுள் வைத்து , சிறைச்சாலை உத்தியோகச்தர்களே தனது கட்சிகாரை வேண்டும் என்று தப்பியோட வைத்தார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார்.
அது தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள், நாம் வேண்டும் என்றே விளக்கமறியல் கைதியை தப்பிக்க வைத்தோம் என எம் மீது குற்றம் சாட்டி எம்மை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து கடுமையாக திட்டினார் என தெல்லிப்பளை காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக தெல்லிப்பளை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நிஷா விக்டர் என அழைக்கப்படும் எஸ். நிஷாந்தன் கொக்குவில் நந்தாவில் அம்மன் கோவிலுக்கு அருகில் வைத்து கோப்பாய் காவற்துறை நிலையத்தை சேர்ந்த இரு காவற்துறை உத்தியோகஸ்தர்களை வெட்டி காயபப்டுத்திய சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இருந்த போதிலும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இருந்த பிறிதொரு வழக்கில் விளக்கமறியல் கைதியாக இருந்தமையால் , தொடர்ந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.
அந்நிலையில் கடந்த 17ஆம் திகதி சிறையில் இருந்து சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் மல்லாகம் நீதிமன்றில் உள்ள வழக்குக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நீதிமன்ற வாளகத்தில் இருந்து தப்பியோடினார்.
தப்பியோடி சில மணிநேரத்தில் மீண்டும் கைது செய்யபட்டு மன்றில் முற்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்றில் இருந்து தப்பியோடிய குற்ற சாட்டுக்கு மல்லாகம் நீதிவான் அ. ஜூட்சன் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love