புதிய அரசியல் அமைப்பின் ஊடாக சட்டம் மற்றும் நிர்வாகத்தை ஆக்கும் உரிமை வழங்கப்பட்டால், அவ்வாறு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளபெறமுடியாதவாறு இருந்தால் அது உள்ளக சுயநிர்ணய உரிமையாக கருதப்படும் என, எதிர்க்கட்சித்தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பில் தெளிவுபடுத்தும் இன்றைய (25.11.17) கல்முனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், புதிய அரசியல் யாப்பில் ‘ஒற்றை ஆட்சியும்’, ‘யுனிட்டரி ஸ்டேட்’ என்ற பதங்கள் இருக்காது எனவும், அதற்கு பதிலாக ஏக்கியராஜிய என்ற சொல் காணப்படும் எனவும் கூறினார்.
இந்த வகையில் ஏக்கியராஜிய என்பதற்கு பிரிப்படாத, பிரிக்கப்பட முடியாத ஒருமித்த நாடு என்ற விளக்கம் கொடுக்கப்படும் என தெரிவித்த சம்பந்தன், அதற்கமைய பிரதேச ரீதியாக நாட்டின் ஒருமைபாட்டை உறுதிபடுத்தும் வகையில் அது அமையும் எனவும் அவர் தெரிவித்தார். அதனையொட்டி மத்தியால், மாகாணத்திற்கு வழங்கப்படும் அதிகாரங்கள் முழுமையாக பயன்படும்தப்படும் எனவும், அதனையே சமஷ்டி என்பதன் குணாதிசயம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வடகிழக்கு இணைப்பு தொடர்பில் பிரச்சினையுள்ளதாகவும், தீர்வு விடயத்தில் முஸ்லிம் மக்களை எந்தவகையிலும் தனித்துவிட போவதில்லை” எனவும் கூறிய சம்பந்தன், பொருளாதார ரீதியில் இலங்கை முன்னேற்றம் காண வேண்டுமாயின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுவது மிக மிக அவசியம் என வலியுறுத்தினார்.
அதனால் “அரசியல் அமைப்பை நிறைவேற்றிக் கொள்ளவே கூட்டமைப்பு தன்னம்பிக்கையுடன் பயணிப்பதாகவும் அவ்வாறான இலக்கை அடைவதற்கு தன்னாலான சகல ஒத்துழைப்புகளை வழங்குவதாக குறிப்பிட்ட அவர், தமிழ் மக்களுக்கு ஏற்புடையதல்லாத அரசியல் யாப்பை ஏற்கப் போவதில்லை எனவும் கல்முனையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் தெளிவுபடுத்தி உள்ளார்.