மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு கிழக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நவம்பர் 27ஆம் திகதி 6.5க்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் விளக்கேற்றப்படவுள்ளன. இந்த நிலையில் திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நாள் ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் இன்று மாவீரர் நாள் ஏற்பாட்டாளர்களுடன் செய்தியாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளை முன்னெடுத்தல், மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாடுகள் என்பன இதன்போது ஆராயப்பட்டன. இதேவேளை கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்திலும் மாவீரர்நாள் நிகழ்வு ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
கடந்த ஆண்டு மாவீரர் தினத்தை முன்னிட்டு விளக்கேற்றுவதற்கு முதன் முதலாக இந்த துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணி இடம்பெற்றது. இம்முறை முவாயிரம் சுடர்களை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் நிகழ்வு ஏற்பாடுகள், மக்களுக்கான சேவைகள் என்பன தொடர்பிலான பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மாவீரர் பணிக்குழு உறுப்பினர் ஒருவர் கூறினார்.
இதேவேளை கிளிநொச்சி முழங்காவில் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு தேராவில் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. கடந்த ஆண்டு இந்த துயிலும் இல்லத்தில் சுடரேற்ற இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
இதேவேளை வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அத்துடள் முள்ளியவளை துயிலும் இல்லம், யாழ் கோப்பாய் துயிலும் இல்லத்திலும் சுடர் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை கோப்பாய் துயிலும் இல்லத்தில் இராணுவ தலமை முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர் அதனை அண்டிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதுடன் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுவதாக யாழ் பிராந்திய பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2016இற்கு முன்னரான காலத்தில் துயிலும் இல்லத்தில் விளக்கேற்ற அனுமதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு முதன் முதலாக துயிலும் இல்லத்தில் விளக்கேற்ற அனுமதிக்கப்பட்டபோதும் இன்னமும் பல துயிலும் இல்லங்கள் இராணுவத்தின் முகாங்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.