குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாடுகளை முன்னெடுத்தவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் செயற்பட்டு உள்ளனர். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை ஆக்கிரமித்து இராணுவத்தினர் பாரிய படை முகாம் ஒன்றினை அமைத்துள்ளனர்.
அந்நிலையில் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடுகளை துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்து உள்ளமையால் , துயிலும் இல்லத்தில் இருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திற்கு அப்பால் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் இன்றைய தினம் முன்னேடுக்கபட்டது.
அதன் போது அவற்றை குழப்பும் விதமாக பவள் கவசவாகனம் , இராணுவ பேருந்துக்களில் சிவில் உடையில் பல இராணுவத்தினர் அழைத்து வரப்பட்டு அவ்விடத்தில் குவிக்கப்பட்டனர். அவ்விடத்தில் சிவில் உடையில் குவிக்கப்பட்ட இராணுவத்தினர் நிகழ்வு ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்களை தமது கையடக்க தொலைபேசிகள் மற்றும் புகைப்பட கருவிகள் ஊடாக ஒளிப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
அதனால் அவ்விடத்தில் சிறிது பதட்டம் ஏற்பட்டது. இருந்த போதிலும் இரானுவத்தினர் ஒளிப்படங்களை எடுத்ததை பொருட்படுத்தாத ஏற்பாட்டாளர்கள் தொடர்ந்து நிகழ்வு ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.