161
இனி எம் கல்லறைகளுடன் பேசுக! – தீபச்செல்வன்
எம் இருதயத்தை பிளந்த
யுத்தக் கல்லை பார்த்ததுபோதும்
எமை கொன்று வீசிவிட்டு
வெற்றிக் கூச்சலிடும்
உம் படைவீரரின் சிலையை பார்த்ததுபோதும்
எம் தேசமழித்து
அழிக்கப்பட்ட எம் உடல்களின்மேலே
ஒற்றை நாடென நடனமாடும்
வரைபட கல்லைப் பார்த்ததுபோதும்.
எம் வீரர்கள் விதைக்கப்பட்ட நிலத்திற்கு
வருகவெம் சிங்களச் சகோதரர்களே!
வந்தெம் முகங்களின் காயங்களைப் பார்க்கவும்
நூற்றாண்டாய் எம் தலைகளை அழுத்திய
பெரும் பாதங்களின் வீரத்தைப் பார்க்கவும்
மனிதம் தலைகுனிய கல்லறைகளுடன்
போர் புரிந்த உம் படைகளின் தீரத்தைப் பார்க்கவும்
மாண்டவர்களின் துயில் கலைத்து
உறங்க இடமறுத்த மாண்பை பார்க்கவும்
சற்று அமர்ந்தே
எங்கள் கல்லறைகளுடன்
பேசுக எம் சிங்கள சகோதரிகளே!
உடைபட்ட கல்லறையின் துகளொவ்வொன்றும்
எம் தாகம் எடுத்துரைக்கும்
எம் தலைமுறையின் கனவைச் சுமந்திருக்கும்
Spread the love