தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜேயின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; மூன்று நாள் அரசமுறை பயணமொன்றை மேற்கொண்டு இன்று (27) பிற்பகல் தென்கொரியா பயணமானார். இலங்கைக்கும் கொரியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 வருடங்கள் நிறைவடைவதுடன் இணைந்ததாக ஜனாதிபதியின் இப்பயணம் இடம்பெறுவதுடன், இலங்கைக்கும் கொரியாவுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்துவதே இதன் நோக்கமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும்; தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நாளை மறுதினம் (29) இடம்பெறவுள்ளது. இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் பரஸ்பரம் அக்கறை காட்டிவரும் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார கூட்டுறவு, கலாசாரக் கூட்டுறவு தொடர்பான உடன்படிக்கைகளும் முதலீட்டு கூட்டுறவு மற்றும் தொழில் அனுமதிப்பத்திர முறைமை தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் ஜனாதிபதி அவர்களின் இவ்விஜயத்தின் போது கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது