குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆவா குழுவை சேர்ந்த மற்றுமொரு முக்கிய செயற்பாட்டாளர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக கோப்பாய் காவல்நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம். ஹகந்தவெல தெரிவித்துள்ளார். யாழ்.கொக்குவில் கிழக்கு பகுதியை சேர்ந்த சாரு என அழைக்கப்படும் 17 வயதுடைய நபரே கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அது தொடர்பில் பொறுப்பதிகாரி தெரிவிக்கையில் ,
ஆவா குழுவை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் பற்றி தமக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளோம். அவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோண்டாவில் பகுதியில் உணவகம் உடைக்கப்பட்டமை , முடமாவடி பகுதியில் வான் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன சேதமாக்கப்பட்டு வீடு உடைக்கபப்ட்டமை , கல்வியங்காட்டு பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி உடைக்கப்பட்டமை உள்ளிட்ட கோப்பாய் காவல் பிரிவுக்கு உட்பட்ட சம்பவத்துடனும் , மானிப்பாயில் ஆவா குழுவில் இருந்து பிரிந்து சென்ற தனு ராக்ஸ் குழுவை சேர்ந்த தனுவின் வீடு உடைத்தமை தொடர்பில் மானிப்பாய் காவல் நிலையத்திலும் மற்றும் யாழ். காவல்துறைக்கு உட்பட்ட பிரிவில் ஒரு குற்ற சம்பவத்துடனும் இவருக்கு நேரடி தொடர்பு உள்ளது என்பது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். இன்றைய தினம் கைது செய்த நபரை நாளை புதன் கிழமை நீதிவான் முன்னிலையில் முற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என மேலும் தெரிவித்தார்.