குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமஸ்டி முறை ஆட்சிக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தென்கொரியாவிற்கு உத்தியோகபூர்வ பயணமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டில் வாழ்ந்து ரும் இலங்கையர்களை சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இனத்துரோகம் செய்வதற்காக தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிடடுள்ள அவர் பிளவுபடாத நாட்டில் அனைத்து இன மக்களுக்கு இடையிலும் சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.
அனைத்து இன மக்களுக்கு இடையிலும் நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உலக நாடுகளினால் ஏளனம் செய்யப்பட்டு வந்த இலங்கையின் நன்மதிப்பினை கட்டியெழுப்ப முடிந்தது என தெரிவித்துள்ள ஜனாதிபதி சர்வதேச சமூகத்தை வெற்றிகொள்ளும் முயற்சி வெற்றியளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச யுத்தக் குற்றவியல் நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகள் மற்றும் மின்சார நாற்காலி போன்றன பற்றிய பீதி முடிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் சிலர் அதனை தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.