மக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் எனவும் புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது எனவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ராமையா, தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் நீதிபதி மக்கள் நலன், இயற்கை வளம் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும். புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது.
மேலும், மணல் தேவையை எதிர்கொள்ள வெளிநாட்டிலிருந்து மணலை இறக்குமதி செய்யலாம். மணல் சுரண்டலைத் தடுக்க வேண்டியது அவசியம் எனவும் தீர்ப்பு வழங்கினார்.
வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் உரிமம் பெற்று, மலேசியாவில் இருந்து 53, 334 மெட்ரிக் தொன் மணல் இறக்குதி செய்ததாகவும் இந்த மணல் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதி வழங்கவும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.