குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புதிய அரசியலமைப்பின் படி மாகாண சபைகளுக்கான தேர்தல் ஜம்பது வீதம் தொகுதிவாரியாகவும், ஜம்பது வீதம் விகிதாசாரப் படியும் இடம்பெறவுள்ளது.
மாவட்ட ரீதியாக தொகுதிகள் எல்லை நிர்ணயம் செய்யும் வகையில் மக்கள் கருத்தறியும் அமர்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்தக் கருத்தமர்வு கடந்த 28 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மாகாண சபை உறுப்பினா்கள் நான்கு பேர் தெரிவு செய்யப்படுகின்றனர். இதில் இனிவரும் தேர்தல்கள் மூலம் இருவா் தொகுதிவாரியாகவும் இருவா் விகிதாசார முறைபடியும் தெரிவு செய்யப்படவுள்ளனா். எனவே மாவட்டத்தை இரண்டு தொகுதிகளாக பிரிக்கும் மக்கள் கருத்தறியும் அமர்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் குடிப்பரம்பல் அடிப்படையில் இரண்டு தொகுதிகள் ஆக்கும் போது குடிப்பரம்பல் செறிவு அதிகமுள்ளதும் பெரு நகர மையமாகக் கொண்டதுமான கரைச்சி பிரதேசத்தை ஒரு தொகுதியாகவும் குடிபரம்பல்குறைவான ஏனைய கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி, ஆகிய மூன்று பிரதேசங்களை இன்னுமொரு தொகுதியாகவும், ஏற்படுத்துவதே சிறப்பானது.
அத்தோடு புவியியல் தொடர்பு மற்றும் சனத் தொகை சமநிலையை கருத்தில் கொண்டு உருத்திரபுரம் வடக்கு மற்றும் பெரிய பரந்தன் என்பனவற்றை பூநகரியோடு சேர்த்துக்கொள்ள முடியும் எனவும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பாக முன் மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளது.
அத்தோடு பல அமைப்புகள் மற்றும் பேராசிரியர் விக்கினேஸ்வரன் ஆகியோரும் தங்களது கருத்துக்களை மேற்கண்டவாறே கூறியதோடு, எழுத்து மூலமும் ம hகாண தேர்தல் எல்லை நிர்ணயக் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளனா்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினா் சி. சிறிதரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினா்களான குருகுலராஜா, பசுபதிபிள்ளை உள்ளிட்ட கிளிநொச்சி தமிழரசுக் கட்சியினர் தங்களது முன்மொழிவுகளில் கிளிநொச்சியை முகமாலை தொடக்கம், இரணைமடு வரையான எ9 பிரதான வீதியை மையமாக கொண்டு கிளிநொச்சி கிழக்கு தொகுதி என்றும் கிளிநொச்சி மேற்கு தொகுதி என இரண்டாக பிரிக்குமாறும் தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இதேவேளை வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் கிளிநொச்சியில் தங்களது மக்கள் செறிவாக வாழும் 19 கிராம அலுவலா் பிரிவுகள் ஒரு தொகுதிக்குள் வருமாறு எல்லை நிர்ணயம் அமைய வேண்டும் என்றும் அதுவே தங்களின் பொருளாதார அரசியல் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்றும் தங்களின் கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.