குளோபல் தமிழ்ச் செய்தியாளர் – வடக்கு:-
ஆவா குழு + சுவிஸ் தமிழ் அமைப்பு + புலிகள் + மாவீரர் தினம் = ???!
ஆவா குழுவுக்கு நிதியுதவி மற்றும் அறிவுரை கிடைக்கப் பெறுவது, சுவிட்சலாந்தில் இருக்கும் தமிழ் அமைப்பு ஒன்றின் மூலம் என, காவற்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது கூறப்படுகிறது.
கைதுசெய்யப்பட்டுள்ள ஆவா குழு தலைவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக காவற்துறைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
சுவிட்சலாந்திலுள்ள இந்தக் குழுவினர், தற்போதும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், அக் குழுவில் இருக்கும் இருவர் தற்போது இலங்கைக்கு வந்திருப்பதாகவும் காவற்துறையினருக்கு தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. அவர்கள் இருவரும் மாவீரர் தின நிகழ்வுகளுக்காகவே இலங்கைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, இலங்கையிலுள்ள பிரந்தன் எனும் ஒருவரிடமே குறித்த சுவிட்சலாந் து தமிழ் அமைப்பினர் தொடர்பைப் பேணி வருவதாவும், அவர் வழங்கும் பணிப்புரைப்பு அமையவே ஆவா குழு செயற்படுவதாகவும், கைதுசெய்யப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் கூறியுள்ளார். இதேவேளை ஆவா குழுவின் தோற்றம் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள படையினரும் புலனாய்வளர்களும் என யாழ்ப்பாணத்தின் முக்கிய தரப்புகள் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
வடக்கில் மக்கள் தொகைக்கு ஈடாக படையினர் நிலைகொண்டுள்ள நிலையில் வாள்கள் கத்திகள் ஆயுதங்களுடன் அனைவருக்கும் சவால் விடுக்கும் வகையில் ஒரு குழு எப்படி செயற்பட முடியும்? என்ற கேள்விகள் அனைவரையும் துளைத்தெடுக்கும் போது, ஆவா குழுவை புலம்பெயர் அமைப்புகளுடனும், விடுதலைப்புலிகளுடனும் தொடர்புபடுத்துவதும். மாவீரர் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்துவதும், அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடுகளா என வடக்கின் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதேவேளை ஆவா குழு என ஒரு குழு யாழில் முதல் முதல் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து இரண்டு புதிய கிரணைட்கள், பிரேசிலில் தயாரிப்பு வாள் ஒன்று உட்பட வாள்கள் கைப்பற்றப்பட்டது. அதன் பின் சிறிது காலத்தில் பின்னர் கொக்குவில் பிரம்படி பகுதியில் வீடொன்றில் மறைந்திருந்த டில்லு குழு என ஆறு பேரைகைது செய்தனர் அதன் போது இராணுவ சீருடையை ஒத்த உடைகள் கிரணைட் ஒன்று என்பன வாள்களுடன் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு அதன் பின்னரும் ஆவா குழு என யாழில் இளைஞர்கள் கூட்டாக கைது செய்யப்படும் சந்தர்ப்பங்களில் எல்லாம் வாள்களுடன் கிரணைட்களும் மீட்கப்படும். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட வாள்களுடன் கிரணைட் ஒன்றும் மீட்டுள்ளனர். இந்த கிரணைட்டுகள் எங்கிருந்து எவ்வாறு வந்தது என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை. அப்படி இருக்கும் போது ஆவா குழுவை புலம்பெயர் தமிழர்களுடனும், புலிகளுடனும், மாவீரர் தினத்துடனும் இணைப்பதன் இலக்கு என்ன என்ற சந்தேகங்கள் பரவலாக எழுப்பப்பட்டு உள்ளன. அத்துடன் பயங்கரவாத்த்தை பூண்டோடு அழித்த உலகின் முதற்தர ராணுவம், புலனாய்வுத்துறை என கூறும் இலங்கை பாதுகாப்பு தரப்பிற்கு ஆவாவையும், தாராவையும் பிடிக்க முடியவில்லையா? என்ற கேள்விகளையும் தொடுத்துள்ளனர்.