குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவது மற்றும் ஆசனம் பங்கீடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் நடைபெற்றது.
யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் அக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கிழமை மாலை நடைபெற்றது. குறித்த சந்திப்பு சுமார் ஆறு மணித்தியாலத்திற்கு மேல் நடைபெற்று இருந்தது.
இச் சந்திப்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட் ஆகிய மூன்று கட்சிகளுமே கலந்து கொண்டிருந்த போதும் ஈபிஆர்எல்எப் கட்சி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் போது தமிழரசுக்கட்சியின் சார்பில் அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் செயலாளர் உள்ளிட்டவர்களும், புளொட் அமைப்பின் சார்பில் மாகாண அமைச்சர் க.சிவனேசன் உள்ளிட்டவர்களும் அதே போன்று ரெலோ அமைப்பின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் என்.சிறீக்காந்தா மற்றும் துணைத் தலைவர்கள் உள்ளிட்ட தரப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வாறு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கள் குறித்தான ஒதுக்கீடுகள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.