குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இயற்கை அனர்த்தம் தொடர்பில் ஏன் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஏன் உரிய எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கத் தவறியது என பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்களில் இயற்கை சீற்றம் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்ட போதிலும் அது குறித்து என் இலங்கையின் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை எச்சரிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். வளிமண்டலவியல் திணைக்களம் உரிய எச்சரிக்கைகளை வழங்கியிருந்தால் உயிர் மற்றும் உடமை சேதங்களை வரையறுத்திருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றில் உரையாற்றிய போது நேற்றைய தினம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே மீனவர்களுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டதாகவும் இதனாலேயே அழிவுகள் வரையறுக்கப்பட்டது எனவும் அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் நவீனமயப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.