மியான்மரின் ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலை இன அழிப்பாக அறிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிலர், கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் மியான்மரில் உள்ள காவல்துறையினரின் சோதனைச் சாவடிகளின்மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அவர்களுக்கு எதிரான ராணுவத்தின் தீவிரம் அடைந்தது. இதனையடுத்து சுமார் 6 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டைநாடான பங்களாதேசில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
மேலும் ரக்கினே மாநிலத்துக்குள் பத்திரிகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரோஹிங்கியா மக்கள்மீது மியன்மார் அரசும் ராணுவமும் அடக்குமுறையை பயன்படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. ரக்கினே மாநிலத்தில் உள்ள மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தி தரப்பட வேண்டும் எனவும் ஆங் சான் சூகியிடம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்ரனியோ குட்டாரஸ் வலியுறுத்தியிருந்தார்.
இதேபோல், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் மற்றும் பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் ஆகியேர் ஆங் சான் சூகியை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினர். இந்நிலையில், மியான்மர் நாட்டின் ரக்கினே மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதலை இன அழிப்பாக அறிவித்து அமெரிக்க பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மியான்மரில் ரோஹிங்கியா இனத்தவர்களுக்கு எதிரான படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்னும் செய்தியை மியான்மர் தலைவர்களுக்கு இந்த கண்டன தீர்மானத்தின் மூலம் பதிவு செய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரின் கொடூரமான நடவடிக்கைகளுக்கு முடிவுகட்டி உடனடியாக வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். மக்களுக்கு மனிதநேய அடிப்படையிலான உதவிகள் சென்று சேர்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரக்கினே மாநிலத்தில் நடைபெற்றுவரும் நடவடிக்கைகள் தீவிரவாத ஒழிப்பின் ஒருபகுதி என்று மியான்மர் அரசு கூறி வருவதை நாங்கள் நிராகரிக்கின்றோம் எனவும அங்கு நடந்து வருவது அப்பட்டமான இன அழிப்பாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது