குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசுக் கட்சியுடன் ஆசனப் பங்கீடு தொடர்பில் முரண்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவதாக இன்று அதிகாலை அறிவித்த ரெலோ, ஏனைய அரசியல் கட்சிகளுடன் சந்திப்புக்களை நடத்திவருவதாக அந்தக் கட்சியின் செயலாளர் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்தார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியுடன் நாளை பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரெலோவின் அரசியல் குழு, யாழ்ப்பாணம் நகர் கொட்டடியில் இன்று மாலை கூடிய ஆராய்ந்தது. அந்தச் சந்திப்பின் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் இன்று மாலை என்னுடன் தொலைபேசியில் உரையாடினார்.
தமிழ் தேசி கூட்டமைப்புக்கு நேற்றைய நாள் கடினமாக அமைந்துவிட்டதாகவும் முரண்பாடுகள் தொடர்பில் கூடிப் பேசுவோம் எனவும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையுடன் எந்தநேரமும் பேச்சு நடத்த ரெலோ தயார் என்பதை அவரிடம் நான் கூறினேன்.
எனினும் எமது முடிவில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கின்றோம். ஈபிஆர்எல்எப் உள்ளிட்ட தரப்புகளுடன் நாம் இன்று பேச்சு நடத்தினோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமாருடனும் நாளை பேச்சு நடத்துகின்றோம்.
எமது நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடி வருகின்றோம். தமிழ் அரசுக் கட்சியும் பேச்சுக்கு அழைத்தால் செல்வோம்’ என்று சிறிகாந்தா மேலும் தெரிவித்தார்.