எனது இசை குருநாதர் இனி இல்லை என ஆதித்யன் மறைவு குறித்து இமான் கவலை தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் ஆதித்யன் ஹைதராபாத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தனது 63 வயதில் காலமாகியுள்ளார்.
‘அமரன்’ திரைப்படம் தொடங்கி தென்னிந்தியாவின் குறிப்பிடத்தகுந்த இசையமைப்பாளராக வளர்ந்தவர் ஆதித்யன ஆதித்யன் சமீப காலமாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார்.
‘சீவலப்பேரி பாண்டி’ திரைப்படம் ஆதித்யன் இசையமைப்பில் வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் தமிழில் ‘நாளைய செய்தி’, ‘அசுரன்’, ‘மாமன் மகள்’, ‘லக்கிமேன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்ளிட்ட படங்களிலும், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் பல படங்கள் வெற்றிபெற்றன. முதன்முதலில் ரீமிக்ஸ் பாடல்களுக்கான காணொலி அல்பம் வெளியிட்ட இசையமைப்பாளரும் இவரே.
சிலகாலம் இசையமைப்பதிலிருந்து விலகியிருந்த ஆதித்யன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சமையல் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மீண்டும் பிரபலமாகியிருந்தார்.
இந்தநிலையில் தற்போது முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இமான், ஆதித்யன் மறைவு குறித்து தனது ரு;விட்டர் பக்கத்தில் ‘எனது இசை குருநாதர் இனி இல்லை என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. என் ஆரம்ப நாட்களில் கீபோர்டு புரோகிராமராக என்னை ஊக்குவித்தவர்களில் ஓர் ஆளுமை அவர். அவர் இனி இல்லை என்ற யதார்த்தத்தை எதிர்கொள்வது இதயத்தைக் கனக்கச் செய்கிறது. ஏராளமான நினைவுகளை நேயத்துடன் சுமக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.