சிக்கலில் சிக்கியது விஜய் சேதுபதியின் படமும்…
இந்தியாவில் திரைக்கு வரும் பல படங்கள் சர்ச்சை காட்சிகள் மற்றும் வசனங்களால் அரசியல் கட்சிகள், மத அமைப்புகளின் எதிர்ப்புகளுக்கு உள்ளாவது வழக்கமாகி விட்டது. விஜய்யின் மெர்சல் படத்தில் இடம்பெற்று இருந்த GST வசனத்துக்கு பா.ஜனதா கட்சியினரும் மருத்துவ துறை குளறுபடிகள் சம்பந்தமான வசனத்துக்கு வைத்தியர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். கிந்தியில் தயாரான பத்மாவதி படத்தில் வரலாற்றை திரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியதால் வடமாநிலங்களில் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ திரைப்படத்தை தொடர்ந்து ‘கேம் ஆப் அயோத்யா (Game of Ayodya)’ என்ற திரைப்படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் அலிகர் நகரை சேர்ந்த சுனில்சிங் என்ற அரசியல்வாதி இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார்.
தற்போது விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?’ என்ற வசனத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
சமீபத்தில் இணையதளங்களில் வெளியான படத்தின் டிரெய்லரில் இந்த சர்ச்சை வசனம் வருகிறது. “ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?.. ராவணன், சீதையை தூக்கிட்டு வந்து கைபடாம பத்திரமா வெச்சிருந்தான்..அவனை நாம அரக்கன்னு சொல்றோம்… ராமன் சீதையை காப்பாத்தி கொண்டுபோய் அவளை சந்தேகத்தீயில போட்டு எரிச்சானா.. அவன நாம கடவுள்னு சொல்றோமா..ராமனும் நான்தான், ராவணனும் நான்தான் என்று விஜய் சேதுபதி பேசுவதுபோல் வசனம் உள்ளது.
ராமனை அவதூறு செய்வதுபோல் இந்த வசனங்கள் இருப்பதாக பா.ஜனதா கட்சியினர் மத்தியில் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விஜய் சேதுபதி படங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
படம் திரைக்கு வரும்போது போராட்டங்கள் நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். இதனால் படக்குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ராவணன் மற்றும் சாமியார் உள்ளிட்ட பல்வேறு தோற்றங்களில் நடித்துள்ள படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.