குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ மோசடியில் ஈடுபட்டமை குறித்த சான்றுகளை நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர். ராஜபக்ஸக்களின் பெற்றோர்களான டி.ஏ. ராஜபக்ஸ தம்பதியினரின் நினைவுத்தூபி அமைக்கும் போது பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்கவிடம் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்ஸ நினைவுத் தூபி மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அப்போதைய அரசாங்க அமைச்சரவையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை என்பது விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. இந்த நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு வீரகெட்டிய பிரதேச சபையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். நிர்மானப் பணிகள் தொடர்பில் நிறுவன ரீதியான ஆவணங்கள் கோவைகள் எதுவும் பேணப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.
கோதபாய ராஜபக்ஸவின் வெறும் வாய்மொழி மூல உத்தரவிற்கு அமையவே இந்த நிர்மானப் பணிகளுக்கான ஊழிய வளமாக கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிதி நியதிச் சட்டங்கள் இந்த நிர்மானப் பணிகளின் போது உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பொதுச் சொத்து துஸ்பிரயோகம் தொடர்பில் கோதபாய ராஜபக்ஸவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும ஜனவரி மாதம் 23ம் திகதி மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.