எக்காரணம் கொண்டும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டாம் என பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான புளொட் த.சித்தார்த்தன், ரெலோ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரிடம் நான் விநயமாகக் கேட்டுள்ளேன் என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்சி. இது ஒரு குடும்பம் போன்றது. குடும்பத்துக்குள் சிறுசிறு பிரச்சினைகள், தவறுகள் வருவது வழமை. இதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது. வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கூட்டமைப்பை பிளவுபடுத்த உள்ளுக்குள்ளும் வெளியிலும் சிலர் கங்கணங்கட்டிச் செயற்பட்டு வருகின்றார்கள். இதற்குத் துணைபோகாதீர்கள். ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம். இந்த நம்பிக்கை எனக்கு உண்டு.
இந்த நிலையில் ஆசனப் பங்கீட்டு விவகாரத்தைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம், பேச்சு நடத்தலாம் என்று அவர்களிடம் தெரிவித்தேன். தொடர்ந்து பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று அவர்களும் கூறினர். இந்த விவகாரம் குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் தொலைபேசியில் நான் பேச்சு நடத்தியுள்ளேன். இறுதி முடிவு நல்லதாக அமையும். கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளான, தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் ஆகியன ஒற்றுமையுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும்” என இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.