காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரிப் போராடிவரும் மீனவர்களின் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் பழனிசாமியை சென்னையில் உள்ள அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதனைத்தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் உறுதியளித்ததை அடுத்து, சென்னையில் நடைபெற்ற போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.
ஒக்கி புயலால் நடுக்கடலில் மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று கோரி, கன்னியாகுமரி மற்றும் சென்னையில் அதிகளவான மீனவ குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களின் சார்பாக மீனவர் சங்கப் பிரதிநிதிகள், முதலமைச்சரைச் சந்தித்துப் பேசியதுடன் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் கையளித்துள்ளனர்.
மீனவர் மீட்புப் பணி குறித்து வேறு எப்போதும் இல்லாத வகையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலனை செய்வதாகவும் தங்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் முடிந்தளவு நிறைவேற்ற முயற்சிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் மீனவர்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.