ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் இஸ்ரேல் ராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய கிழக்கு போரின் போது பாலஸ்தீனிடம் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேத்தினை இஸ்ரேல் தனது தலைநகர் என தெரிவித்து வரும் நிலையில் ஏனைய நாடுகள் அதனை ஏற்கவில்லை.
இந்தநிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக டிரம்ப் சில தினங்களுக்கு முன் அறிவித்ததுடன் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்று உத்தரவிட்டார். இந்நிலையில், இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் உள்ள காசா எல்லையில் பாலஸ்தீனர்கள் இன்று ஒன்று கூடி டிரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.
ஆத்துடன் பேரணியில் ஈடுபட்டவர்கள் டிரம்பின்; உருவப் படத்தை தீயிட்டு எரித்தனர். இதை தடுக்க முயன்ற ராணுவத்தினர் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து, பேரணியில் பங்கேற்றவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதில் இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.