குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் இரவு கையொப்பமிட்டுள்ளார். புகையிரத திணைக்களத்தின் தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டங்களினால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
புகையிரத தொழிற்சங்கங்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துள்ளன. ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ நேற்றைய தினம் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததனைத் தொடர்ந்து, புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். இன்றைய தினம் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.