ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஹம்பாந்தோட்டை இன்ரநாசனல் போட் குரூப் மற்றும் ஹம்பாந்தோட்டை இன்ரநாசனல் போட் சேவிஸ் (Hambantota International Port Group (HIPG) and Hambantota International Port Services)ஆகிய நிறுவனங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று பாராளுமன்ற வளாகத்தில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன்மூலம், மொத்த கொடுப்பனவில் இருந்து முதல் 30 வீதமான, 294 மில்லியன் அமெரிக்க டொலர் திரைசேரிக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அரச – தனியார் இணை வேலைத் திட்டத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தி, அதனை அபிவிருத்தி செய்வதற்கான இணை ஒப்பந்தம் 2017ம் ஆண்டு ஜுலை மாதம் 29ம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இதனடிப்படையில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஸ்தாபிக்கப்பட்ட விசேட பணிகளை மேற்கொள்ளும் இரு நிறுவனங்களும் தமது செயற்பாட்டினை இன்று (2017.12.09) முதல் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
HIPG நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் 85 வீதமானது CA PORT நிறுவனத்துக்கோ அல்லது அதனுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கோ உரித்தாவதுடன், 15 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தாகின்றது.
அதேபோன்று HIPS நிறுவனத்தின் பங்கு முதலீட்டில் 58 வீதம் அந்த நிறுவனத்துக்கு கிடைப்பதுடன், எஞ்சிய 42 வீதம் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு உரித்தாகின்றது. இதனடிப்படையில் பங்கு உரிமை தொடர்பில் உரிய தரப்பினருடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவது குறித்த யோசனைக்கு, அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.