குஜராத் மாநிலத்தில் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் காலை மணி நிலவரப்படி 9.77 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தின் 182 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று டிசம்பர் 9ம்திகதி முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கும், 2-ம் கட்டமாக 14ம்திகதி 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் சார்பில் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில், முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. முதல் கட்ட தேர்தலில் நடைபெறும் 89 தொகுதிகளில் 2.12 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதற்காக 24,689 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக 27,158 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் கூடிய பற்றுச்சீட்டு வழங்கும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குஜராத்தில் தொடர்ந்து 22 ஆண்டாக ஆட்சி செய்து வரும் பா.ஜ.க., 5-வது முறையாக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்ற நிலையில் காங்கிரஸ் தலைவராக விரைவில் பொறுப்பேற்க உள்ள ராகுல் காந்தியின் தலைமைக்கு விடுக்கப்பட்ட சவாலாக தேர்தல் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.