குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளினாலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இவ்வாறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான உடன்படிக்கை எதிர்வரும் 31ம் திகதியுடன் பூர்த்தியாகின்றநிலையில் இந்த உடன்படிக்கையை இரண்டு வருடங்களுக்கு மேலும் நீடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜனாதிபதியை பொது வேட்பாளராக போட்டியிடச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர்களும் தற்போதும் அமைச்சுப் பதவி வகிக்கும் சிலரும் இந்த உடன்படிக்கையை கைச்சாத்திட ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை விட்டு விலகினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்படக்கூடிய சாத்தியம் உண்டு என சுட்டிக்காட்டப்படுகின்றது. இரண்டு கட்சிகளுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமைகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இரண்டு தரப்பினரும் ஜனாதிபதி மீது அழுத்தங்களை பிரயோகித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்குமாறு கோரி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது