பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை கடுமையான பனிப்பொழிவு ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கு இங்கிலாந்து, வேல்ஸ், மிட்லான்ட்ஸ் ஆகிய பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும் எனவும் குறித்த பகுதிகளில் சுமார் 10 சென்ரிமீற்றர் முதல் 20 சென்ரிமீற்றர்வரை பனிப்பொழிவு காணப்படுமெனவும் பிரித்தானிய தேசிய வானிலை நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்தில் ; பனிப்பொழிவுடன் கடுமையான காற்று வீசுவதற்;கான சாத்தியக்கூறும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வேல்ஸ் மற்றும் தெற்கு இங்கிலாந்தில் கடும் மழையுடன், மணிக்கு 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, கிழக்கு மிட்லான்ட்ஸ் மற்றும் சில்ட்ரன் ஆகிய பகுதிகளூடான புகையிரத சேவை பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக, தேசிய புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன் பேர்மிங்ஹாம் விமான நிலையத்தினூடாகப் பயணிக்கும் பயணிகள், கடுமையான பனிப்பொழிவு காரணமாக இன்று காலை போக்குவரத்தில் அதிக நேரத்தை செலவிட நேரிடுமென, அந்நிலையம் கூறியுள்ளது. இவ்வாறிருக்க, கடுமையான பனிப்பொழிவு காரணமாக மன்செஸ்டர் விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை சில விமான சேவைகளின் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
படங்கள் – dailymail