காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் வெளியே சுதந்திரமாக நடமாடுவதாகவும் தாம் வீதிகளில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களினால் மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியொன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பேரணியில் கலந்துகொண்டவர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர். கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணியினர் மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்திடம் மகஜரொன்றினை கையளித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்துக்குச் சென்ற பேரணியினர் அங்கும் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை கையளித்துள்ளனர். மேலும் தமது பிள்ளைகளை எங்காவது தடுத்து வைக்கப்பட்டிருக்கலாமென தெரிவித்த காணாமலாகக்ப்பட்டோரின் உறவினர்கள் ஜனாதிபதி இவ்விடயத்தில் நேரடியாக தலையிட்டு அவர்களை மீட்டுத் தரவேண்டுமெனவும் கேட்டக் கொண்டுள்ளனர்.
பேரணியில் கலந்துகொண்டவர்கள் ‘அரசே அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் நீயே பொறுப்பு கூறவேண்டும்’, ‘சிறைச்சாலைகளில் கைதிகள் துன்புறுத்தப்படுவதை நிறுத்து’, ‘மரணச்சான்றிதழ் எங்களுக்கு வேண்டாம்’, உள்ளிட்ட வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.