குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கிளிநொச்சியிலும் நினைவு கூரப்பட்டது. கிளிநொச்சி பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் கரை்சி பிரதேச சபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு காலை 10 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தில் மனித உரிமை செயற்பாட்டில் ஈடுபட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை கிளி அடிகளார் மற்றும் துணுக்காய் பிரதேச செயலர், ஆகியோரின் திரு உருவபடங்களிற்கு மாலை அணிவித்து நினைவு கூரப்பட்டது.
தொடர்ந்து அங்கு உரைகள் இடம்பெற்றன. உரையாற்றிய அருட்தந்தை மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்தார். இதே வேளை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான நிமலராஜன் உள்ளிட்டோரையும் அவர் நினைவு கூர்ந்திருந்தார்.
உரையாற்றிய உலக தமிழ் பேரவையின் உறுப்பினர் சச்சிதானந்தம் கருத்து தெரிவிக்கையில், யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேசம் மௌனமாகவே இருந்ததாகவும், அவர்கள் எவ்வித அழுத்தத்தினையும் கொடுக்கவில்லை எனவும் கருத்து தெரிவித்திருந்தார்.