நேபாள பாராளுமன்ற மற்றும் மாகாணசபை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையில் எதிர்கட்சியான இடதுசாரி கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது. இந்த கூட்டணி 91 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்துள்ளது.
நேபாள பாராளுமன்றம் மற்றும் 7 மாகாணங்களின் பேரவைகளுக்கான தேர்தல் கடந்த நவம்பர் 26 மற்றும் டிசம்பர் 7ம் திகதிகளில் நடைபெற்றன. 275 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 165 பேர் தேர்தல் மூலமும், 110 பேர் விகிதாசார அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
தேர்தலில் ஆளும் நேபாளி காங்கிரஸ், மாதேசி கட்சிகள் இணைந்து ஓரணியாகவும், நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்டு மையம், அடங்கிய இடதுசாரி கூட்டணி எதிரணியாகவும் போட்டியிட்டிருந்தன.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் எதிர்கட்சியான இடதுசாரி கூட்டணி அமோக வெற்றிபெற்றுள்ளது இந்த கூட்டணி 91 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் முன்னாள் பிரதமர் கே.பி.ஒளி தலைலையிலான நேபாள கம்யூனிஸ்டு கட்சி 66 இடங்களிலும், மற்றொரு முன்னாள் பிரதமர் பிரசந்தா தலைமையிலான மாவோயிஸ்டு சென்டர் கட்சி 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் நேபாளி காங்கிரஸ் கட்சி 14 இடங்களில் மட்டுமே வென்று தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் இது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தது.