தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்படும் ஆணுறை விளம்பரங்கள் சிறுவர் – சிறுமிகள் மனதில் மாறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்துவதாக முறைப்பாடுகள் எழுந்தன. அதனால் அத்தகைய ஆணுறை விளம்பரங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் எனப் பல்வேறு தரப்பில் இருந்தும் இந்திய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறிப்பாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் மிகவும் அநாகரீகமாக இருப்பதாக முறைப்பாடுகள் கூறப்பட்டன. இதுபற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஆய்வு செய்து வந்தது.
இந்த நிலையில் தொலைக்காட்சிகளில் ஆணுறை விளம்பரங்களை பகல் நேரத்தில் ஒளிபரப்பு செய்யக் கூடாது என அந்த அமைச்சகம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரையிலான இரவு நேரத்தில் மட்டுமே ஆணுறை விளம்பரங்களை காட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி ஆணுறை விளம்பரங்களை தயாரிக்க புதிய விதிமுறைகளையும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. அதன்படி “குழந்தைகள் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஆணுறை விளம்பர காட்சிகள் அமையக் கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.
“ஆணுறை விளம்பரங்கள் குழந்தைகள் மத்தியில் எந்த ஒரு ஆர்வத்தையும் உருவாக்கி விடக்கூடாது” என்று மத்திய அரசு உறுதிப்பட கூறி உள்ளது. இதையடுத்து ஆணுறை விளம்பர தயாரிப்பு நிறுவனங்களுக்கு சுயக் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.