வடகொரியாவின் ஏவுகணை சோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளின் கடற்படைகள் கூட்டாக போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.
தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் இணைந்து 2 நாள் கடற்படை போர் பயிற்சியை கொரிய தீபகற்ப பகுதியில் அமெரிக்கா நேற்று ஆரம்பித்துள்ளது. இதில், குறித்த 3 நாடுகளின் சார்பில் 4 நாசகாரி கப்பல்கள் உள்பட ஏராளமான போர்க்கப்பல்கள் ஒத்திகையில் ஈடுபடுகின்றன.
குறிப்பாக இந்த போர் கப்பல்கள், சக்திவாய்ந்த ஏவுகணைகள் தாக்க வருவதை கண்டறிந்து அவற்றை இடை மறித்து தாக்குவதற்குரிய சோதனைகளை நடத்துவதில் ஈடுபட்டுள்ளன.
வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனைகள் பற்றி உடனுக்குடன் மூன்று நாடுகளும் பகிர்ந்து கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதில் கவனம் செலுத்துவதே இந்த போர் பயிற்சியின் நோக்கம் எனவும் இந்த ஒத்திகை இன்றும் தொடரும் எனவும் ஜப்பான், சியோல் ராணுவ அமைச்சுக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு கொரிய தீபகற்ப பகுதியில் தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்கா நடத்தும் மிகப்பெரிய கடல்வழி போர் ஒத்திகை இது என்பது குறிப்பிடத்தக்கது
மூன்று நாடுகளின் கூட்டு போர் ஒத்திகை காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் நேற்று முழுவதும் வெடிச் சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததாகவும் இதற்கு வடகொரியாவும் பதில் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்பதால் கொரிய தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் நிலவுகின்றதெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது