உடுமலை சங்கர் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருப்பூர் அஉடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்த 22 வயதான சங்கர் என்பவரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த 19 வயதான கவுசல்யா என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் வௌ;வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கடந்த வருடம் மார்ச் மாதம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் சங்கர் – கவுசல்யாவை சரமாரியாக வெட்டியதில் பலத்த காயம் அடைந்த சங்கர் உயிரிழந்தார். காயத்துடன் உயிர் தப்பிய கவுசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பினாhர்.
இந்த கொலை குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கூலிப்படை மூலம் கொலை செய்ததாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, மாமன் பாண்டித்துரை உள்ளிட்ட 11 பேரை கைது செய்திருந்தனர். கடந்த ஓராண்டாக இடம்பெற்ற குறித்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்ததுடன் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு பிரிவு 302ன் கீழ் மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனையுடன் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.