பங்களாதேசில் நடைபெற்ற பிரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் கிறிஸ் கெயிலின் அதிரடி சிக்சர்களால் ரங்க்பூர் ரைடேர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. பங்களாதேஸ் பிரீமியர் லீக்கின் இறுதி போட்டி டாக்கா டைனமைட்ஸ் மற்றும் ரங்பூர் ரைடேர்ஸ் அணிகளுக்கிடையே இன்று நடைபெற்றது.
இதில் நாணயச்சுழற்சியில் வென்ற டாக்கா டைமண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்தநிலையில் ஆரம்ப ஆட்டக்காரர்களாக சார்லசும், கிறிஸ் கெயிலும் களமிறங்கினர். எனினும் இரண்டாவது ஓவரிலேயே சார்ளஸ் அவுட்டாக கெயிலுடன் மக்கலம் களமிறங்கினார். இதனையடுத்து கிறிஸ் கெயில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க மக்கல்லமும் ஒத்துழைப்பு வழங்கினார்.
இறுதியில், அந்த அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களைப் பெற்றது. கெயில் 69 பந்துகளில் 18 சிக்சர்கள், 5 பவுண்டரிகள் அடித்து 146 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். மக்கலம் 43 பந்துகளில் 3 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் அடித்து 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, டாக்கா டைனமைட்ஸ் அணி 202 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நிலையில் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் ரங்பூர் ரைடேர்ஸ் அணி 57 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தினை கைப்பற்றியுள்ளது.
இந்த போட்டியின் போது கிறிஸ் கெயில் 18 சிக்சர்கள் அடித்துள்ளதுடன் இருபதுக்கு இருபது போட்டியில் 11,000 என்ற மைல் கல்லை தொட்ட முதல் துடுப்பாட்டக்காரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மேலும் இருபதுக்கு இருபது கிரிக்கெட்டில் 20 சதங்கள் அடித்தவர் என்ற பெருமையுடன் மொத்தம் 819 சிக்சர்கள் அடித்த சாதனை ஆகியவற்றினையும் கிறிஸ் கெயில் பெற்றுள்ளார்.