முன்நிபந்தனைகள் இல்லாமல் வட கொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த தாயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறத்துறை செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். டில்லர்சன்னின் இந்தக் கருத்து வெளிப்பாடு அமெரிக்காவின் முன்னைய நிலைப்பாட்டில் இருந்து தளர்வு நிலைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக வட கொரியா தனது அணு ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என அமெரிக்கா முன்பு கோரிக்கை வைத்திருந்தது. எனினும், வட கொரியா குறித்த, ஜனாதிபதி டிரம்பின் பார்வையில் மாற்றம் ஏற்படவில்லை என டில்லர்சன் கருத்து தெரிவித்த சில மணி நேரம் கழித்து வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
வட கொரியாவின் இடைவிடாத அணு ஆயுத திட்டங்கள், ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், தடைவிதிக்க காரணமாய் இருந்தது. இதேவேளை ”போரைத் தடுப்பது முக்கியமானது” என வட கொரிய அதிகாரிகள் உணர்ந்துள்ளனர் என, வடகொரியாவிற்கு பயணம் மேற்கொண்ட ஐ.நாவின் உயரதிகாரியான ஜெஃப்ஃபரி ஃபெல்ட்மேன், ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, வட கொரிய நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் வட கொரியாவின் சமீபத்திய அணு மற்றும் ஏவுகணை சோதனைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது.
இது, அமெரிக்க ஜனாதிபதி, டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே மோசமான வாக்குவாதங்களுக்கு வழிவகுத்து இருந்தது. அட்லாண்டிக் கவுன்சில் கொள்கை கூட்டத்தில் பேசிய டில்லர்சன், ”வெறுமனே ஒரு அணு ஆயுத வட கொரியாவை ஏற்க முடியாது” என ஏற்கனவே கூறியிருந்தார்.
”நாம் சந்திப்போம். பேசுவோம். பிறகு இணைந்து பணியாற்றுவதற்கான வரைபடத்தை வரைய ஆரம்பிப்போம்” எனக் கூறியுள்ளார். இந்த நிலையில் சிறிது காலத்திற்கு எந்தவிதமான அணுப் பரிநோதனைகளையும் மேற்கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். வெளியுறவுச் செயலர் டில்லர்சன் கருத்து தெரிவித்த சில மணி நேரம் கழித்து அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை,”ஜப்பானுக்கும், சீனாவுக்கும் தென் கொரியாவுக்கு மட்டும், வடகொரியா பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கவில்லை எனவும்,. உலக நாட்டுக்கும் இது பாதுகாப்பற்றதாக உள்ளது” எனவும் தெரிவித்துள்ளது.