அமெரிக்காவின் அலபாமா செனட் சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோய் மூரே வெற்றி பெற மாட்டார் என முன்பே தாம் கூறியது சரியாகி விட்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.
அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோய் மூரேவுக்கு எதிராகக் கடுமையான பிரசாரம் நடந்த நிலையில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்ஸ் வெற்றி பெற்றார்.
25 ஆண்டுகளில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் இங்கு வெற்றி பெறுவது இதுவே முதல்முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூரேவுக்கு ஜனாதிபதி டிரம்ப் ஆதரவளித்த நிலையில் டக் ஜோன்ஸிற்கு கிடைத்த எதிர்பாராத வெற்றி, டிரம்பிற்கு எதிராக எழுந்த கடுமையான எதிர்ப்பாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரோய் மூர் தாம் 14 வயதாக இருக்கும்போது தம்மை மயக்கி பாலியல் ரீதியாக தம்மிடம் தவறாக நடந்துகொண்டதாக ஒரு பெண் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டதோடு இந்தக் குற்றச்சாட்டையும் மறுத்துவந்தார் இந்நிலையில் செனட் தேர்தல் குறித்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டக் ஜோன்சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், தாம் ஆரம்பத்தில் பிரதான குடியரசு கட்சி எதிர்ப்பாளரான லூதருக்கு ஆதரவு அளித்ததை நினைவு படுத்தினார்.