இந்திய வங்கிகள் கேட்டுக் கொண்டதின் பேரில் இங்கிலாந்தில் விஜய் மல்லையாவின், இந்திய மதிப்பிலான 10 ஆயிரம் கோடி ருபாய் சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக தொழில் அதிபரான விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் பெற்றிருந்தார். அதில் 9 ஆயிரம் கோடி ரூபாயை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியதோடு பிரித்தானியாவிற்கு தப்பி சென்றார்.
தற்போது பிரித்தானியாவில் வசித்து வரும் அவர் அங்கு அவருக்கு சொந்தமான நிறுவனங்களையும், சொத்துக்களையும் பராமரித்து வருவதோடு சொகுசு வாழ்க்கை நடத்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் பிரித்தானியாவின் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் விசாரணை தற்பொது நடந்து வருகிறது. இதேவேளை விஜய் மல்லையாவால் ஏமாற்றப்பட்ட 12 வங்கிகள் சார்பில் லண்டனில் உள்ள மேல்நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. தனியார் சட்ட நிறுவனம் மூலம் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்கி வைத்து தங்களுக்கு உரிய தொகையை பெற்றுத் தரும்படி கேட்டு இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை ஏற்கனவே நடந்து வந்தது. நேற்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது விஜய் மல்லையாவின் 10 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விஜய் மல்லையாவின் செலவுக்கு வாரம் இந்திய மதிப்பில் 4 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு வழங்குவதற்கும் நீதஜிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய வங்கிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவருடைய சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு இருப்பதால் இந்திய வங்கிகளுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.
பிரித்தானியாவில் விஜய் மல்லையா Orange India Holdings, யுனைடெட் மது நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார். அவருக்கு பிரித்தானிய வேர்ஜின் தீவுகளிலும் (virgin islands) சொத்துக்கள் உள்ளன. இவற்றின் பெரும் பகுதி முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.