குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிட 9 கட்சிகள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன எனவும் அத்தனை கட்சிகளும் தகுதி பெற்றுள்ளன எனவும் யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும் காலம் இன்று நண்பகல் 12 மணிக்கு நிறைவடைந்தது. கிடைக்கப்பட்ட வேட்பு மனுக்களை ஒழுங்கமைத்த பின் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சாவகச்சேரி நகர சபைக்கு வட்டாரங்கள் அடிப்படையில் 11 உறுப்பினர்களும் விகிதாசார முறைமையில் 7 உறுப்பினர்களுமாக 18 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர்.
இதில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி, சிறிலங்கா பொதுஜன முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன.
அத்தனை கட்சிகளின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்தக் கட்சிகளால் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடத் தகுதியானவர்கள்.
சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட 11 வட்டாரங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழுவே அறிவிக்கவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மேலும் தெரிவித்தார்.