இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ்வைச் சந்திக்க, அவரது மனைவி மற்றும் தாயாருக்கு விசா வழங்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்த்ததாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
இதனை எதிர்த்து நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டதன் பேரில் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்ததுஇ ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்குமாறு அவரது மனைவியும், தாயாரும் இந்திய அரசு மூலம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் குல்பூஷனை அவரது மனைவியும், தாயாரும் எதிர்வரும் டிசம்பர் 25ம் திகதி சந்திக்கலாம் என்று பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில், குல்பூஷனின் மனைவிக்கும், தாயாருக்கும் உடனடியாக விசா வழங்குமாறு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன