அவுஸ்திரேலியாவில், குழந்தைகளுக்கு எதிராக இடம்பெற்ற பாலியல் வன்கொடுமைகள் குறித்து 5 ஆண்டுகளாக இடம்பெற்ற விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இறுதி அறிக்கையில் 400-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவாலயங்கள், பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமை நடந்ததிற்கான ஆதாரங்களை அவுஸ்ரேலிய அரச ஆணையகம் வெளிக்கொணர்ந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டிலிருந்து, இது தொடர்பாக 2,500-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரணைக்காக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மேலும் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரிடம் இருந்து அரச ஆணையகம் விசாரணை மேற்கொண்டதில் , 4000 நிறுவனங்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சட்டம் இயற்றுபவர்கள் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பரந்த அளவிலான திட்டங்களை உள்ளடக்கிய 17 பாகங்கள் கொண்ட இறுதி அறிக்கை இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
அவுஸ்ரேலிய நிறுவனங்களில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் எனவும் சரியான எண்ணிக்கை தமக்கு தெரியவராது எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமூகத்தின் முக்கிய அமைப்புகள் தீவிரமான தோல்வியை தழுவியுள்ளன எனவும் மத குருக்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மீது பொதுவாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கத்தோலிக்க நிறுவனங்களில் மிக அதிக அளவிலான சிறுவர் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவுஸ்ரேலிய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.