குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் தனிப்பட்ட சுதந்திரம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. சட்டவிரோத தடுத்து வைப்புக்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இதனைத் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பொறிமுறைமையின் நடவடிக்கைகளில் சாதகமான முறையில் இலங்கை பங்கேற்று வருகின்றமை வரவேற்கப்பட வேண்டியதாகத் தெரிவித்துள்ளனர். சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
எனினும், சர்வதேச மனித உரிமை சட்டங்களை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளனர். சட்டவிரோத தடுத்து வைப்புக்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் குழு தனது இலங்கை பயணத்தினை முடித்துக் கொண்டதன் பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். காவல்நிலையங்கள், சிறைச்சாலைகள், சிறுவர் நல காப்பகங்கள், மன நல காப்பகங்கள், புனர்வாழ்வு மையங்கள் உள்ளிட்டனவற்றில் தனி நபர் சுதந்திரம் முடக்கப்பட்டு வரும் நிலை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.