வடகொரியாவின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொருளாதார உளவு பார்த்ததாக கூறி அவுஸ்திரேலியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடகொரியா மீது ஐ.நா மற்றும் பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வடகொரியா உயரதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவித்தே 59 வயதான சான் ஹான் சோய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதங்கள், வெடி பொருட்கள் மற்றும் ஏவுகணை தயாரிக்க தேவையான பொருட்கள் ஆகியவை சட்டவிரோதமாக வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஹான் சோய் தரகு வேலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவுக்கு பொருளாதார உளவாளியாக அவர் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
30 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் ஹான் சோய், ஆயுதம் மற்றும் பேரழிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.