சிலியின் தென்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் காணாமல் போயுள்ளனர். அத்துடன் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
அங்கு ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கானோர் மின்சாரமின்றி தவிப்பதோடு, நாட்டின் மற்ற பகுதிகளுடனான தொடர்பையும் இழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான ஏரிப்பகுதியில் உள்ள வில்லா சான்டா லூசியா என்ற கிராமத்திலே 15 பேர் காணாமல் போயுள்ளதனால் அப்பகுதியை அந்நாட்டு ஜனாதிபதி; மீச்செல் பச்செலட் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.
லூசியா கிராம மக்கள் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளுமா மீட்புக்குழுவிற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் எப்போதும் இல்லாத அளவிற்கு கனமழை பெய்ததாகவும் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இக்கிராமத்தில் உள்ள பள்ளத்தாக்கின் ஒரு பகுதி முழுவதும், சுற்றியுள்ள மலைகளில் இருந்த பெருமளவு மண்ணால் சூழப்பட்டுள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
விமானம் மூலம் காப்பாற்றப்பட்ட மக்கள், அருகில் உள்ள நகருக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தொடர்ந்தும் மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.