புசல்லாவ டெல்டா தோட்டம் கிழக்கு பிரிவில் சுமார் 200 வருடங்களுக்கு முற்பட்டதாக கருதப்படும் சிவலிங்கம் ஒன்று (நாகலிங்கம்) கண்டு எடுக்கப்பட்டுள்ளது. (15.12.2017 இரவு 08.00 மணிக்கு) கண்டு எடுக்கப்பட்ட சிவலிங்கம் ஆற்றங்கரையில் காணப்படும் இராமர் ஆலயத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்வையிட்டு வழிபட்டு செல்வதற்காக நாளாந்தம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பெருந்தோட்ட மக்கள் மார்கழி மாதம் திருவெம்பாவையை முன்னிட்டு மார்கழி ஒன்று முதல் தை ஒன்று வரை இராமர் பஜனை பாடுவதும் வழக்கம் அதற்கு மார்கழி முதலாம் நாள் கம்பம் பாலித்தல் நடைபெறும். கம்பம் பாலித்தல் என்பது தொடர்ந்து 30 நாட்கள் பஜனை குழுவினர் வீடு வீடாக செல்லும் போது தூக்கி செல்லப்படும்.
திரிசூலம் வடிவிலான கம்பத்தை தூக்கி செல்பவரை நியமிப்பதாகும். கம்பத்தை தூக்குபவர் பொது மக்களினால் இரகசியமாக வைக்கப்படும் ஒரு தெய்வீக பொருளை சுவாமி ஆடி அருளினால்; வைக்கப்பட்டிருக்கும் அந்த தெய்வீக பொருளை கூறுவதை குறிக்கும்.
அவ்வாறு கூறியவரே அந்த கம்பத்தை தூக்கி செல்வார். அந்த நிகழ்வு தோட்டத்தின் பஜனை ஆசிரியர் அ.பெரியசாமி தலைமையில் பிரதேச இராமர் ஆலயத்தில் நடைபெற்ற போது ஆருடன் கொண்ட எஸ்.ரசிண்டன் என்பவரினால் இரவு வேளையில் தான் ஒரு அதிசயத்தை காட்டவுள்ளதாக கூறி ஆலயத்தின் அருகில் இருக்கும் பாரிய பாலத்திற்கு கீழ் சென்று குறித்த சிவ நாகலிங்கத்தை மீட்டெடுத்து வந்துள்ளார். இந்த சிலை 05 தலை நாகபாம்பு சிவனுக்கு குடைபிடிக்கும் தோற்றத்தில் காணப்படுகின்றது. சிலை காணப்பட்ட இடத்தில் பழமை வாய்ந்த நாக பாம்பு ஒன்றும் தற்போது குடி கொண்டுள்ளது. பாம்பு இருக்கும் குகைக்குல் மாணிக்க கற்கள் இருப்பது போன்ற வெளிச்சங்களும் காணப்படுகின்றது. இதனை பார்வையிடுவதற்காகவும் சிலையை (நாகலிங்கம்) பார்வையிடுவதற்காகவும் வணங்குவதற்காகவும் பெருந்திரலான மக்கள் இப்பிரதேசத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் 200 வருடங்களுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெருந்தோட்டங்களில் தொழில் செய்ய இந்தியாவிலிருந்து வந்தவர்களினால் இந்த இடத்தில் சிவனை (நாகலிங்கம்) வைத்து வணங்கப்பட்டிருக்கலாம் என என்னத்தோன்றுகின்றது.
ஆரூடத்தினால் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சிலை வைக்கப்படடிருந்த பீடம் ஒன்றும் காண்படுகின்றது. இந்த சிவனாலயம் காணப்பட்ட இடத்தில் பாரிய பாலம் ஒன்று ஆங்கியேர்களினால் நிர்மானிக்கப்பட்டுள்ளது இந்த பாலம் ஆலயம் காணப்பட்ட கற்பாறையின் மேல் பகுதியுடன் தொடர்பு பட்டு அமைக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு பாலம் அமைக்கப்பட்டதினால் மக்களால் இந்த ஆலயம் கைவிடப்பட்டிருக்கலாம் எனவும் தோன்றுகின்றது.
அதே வேளை ஆற்றில் காணப்படும் பெரும்பாலான கற்கள் சிவலிங்க வடிவிலேயே காணப்படுகின்றன. இந்த ஆற்றுப்பகுதியில் இவ்வாறு சிவலிங்கம் காணப்படுவதினால் என்னவோ இந்த சிவலிங்கம் இங்கு வைத்து பெருந்தோட்ட மக்களால் வழிபட்டிருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது.
குறித்த நாக பாம்பு இருக்கும் பிரதேசத்திலேயே சிவனுக்கான ஆலயம் அமைத்து சமய ஆகம விதிப்படி சிவனை பிரதிஸ்டை செய்வதற்கான நடவடிக்கைகளை தோட்ட பொது மக்கள் தற்போது முன்னெடுத்து வருகின்றனர். ஆலயத்திற்குறிய நாகபாம்பு குறித்த இடத்தில் காணப்படுவதினால் இந்த இடத்திலேயே ஆலயம் அமைப்பது நல்லது என்றும் அவ்வாறு அமைக்கும் சந்தர்ப்பத்தில் நாகத்திற்கு ஆலயத்திலேயே இருக்கக்கூடிய வாய்ப்பும் பக்தர்களுக்கு அதிக அருளை பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பும் அதிகமாக இருக்கும் என சில சமய பெரியார்கள் கூறுகின்றனர். பாம்பு ஒரு இடத்திலும் சிவன் வேறு ஒரு இடத்திலும் இருந்தால் நாக பாம்பு குழப்பமடையலாம் எனவும் கூறப்படுகின்றது.
இதனை பார்வை இடச் செல்பவர்கள் அங்கிருக்கும் நாக பாம்பிற்கு (நாகலிங்கம்) தொந்தரவு செய்யக் கூடாது எனவும் கேட்டுக் கொள்கின்றார்கள். கண்டெடுக்கப்பட்ட சிவன் சிலைக்கு (நாகலிங்கம்) பக்தர்கள் காணிக்கை செலுத்தி நெல் தூவி வணங்கி வருகின்றனர்.