221
கர்நாடக மாநிலம், பெங்களூர் நகரை சேர்ந்த தேவா ஜித்தேந்திரா நஹாதா எழுத்தாளர், கவிஞர் மற்றும் பாடகர் என பல பரிமானங்களை கொண்டவர். இவர் தன் வாழ்வின் அரை நூற்றாண்டின் பின்னைய நாட்களில் பரத நாட்டிய குரு கே.எம்.ராமன் மற்றும் அவரது மகளான சத்யாவதி சுரேஷ் ஆகியோரிடம் பரத நாட்டியம் பயின்று கடந்த 2010-ம் ஆண்டு தனது 60-வது வயதில் முதல் நடன அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.
கலையார்வத்துக்கும், விடாமுயற்சிக்கும் வயது ஒரு தடையே அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற நாட்டிய விழாவில் விஹார் மஞ்ச் கலைக்கூடத்தின் ’பிரம்மி கலா’ விருதை பெற்றார். பிரபல இந்தி கவிதைகளை நாட்டிய வடிவில் ‘பாவ அபினயா’ என்ற பெயரில் அரங்கேற்றியுள்ளார்.
இந்நிலையில், தனது பேத்தி சவிடோல் நஹாதாவை பரத நாட்டிய வகுப்பில் சேர்த்து, தேர்ச்சி பெறவைத்த தேவா ஜித்தேந்திரா நஹாதா, தற்போது 13 வயதாகும் பேத்தியுடன் ஒன்றாக மேடையேற தீர்மானித்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பாடசாலையில் எட்டாம் வகுப்பில் கற்கும் சவிடோல் நஹாதா, தனது நான்காம் வயதில் இருந்து மேற்கத்திய ‘பாலட்’ நடன பயிற்சி பெற்று ‘சின்ட்ரெல்லா’, ‘சிலீப்பிங் பியூட்டி’ உள்ளிட்ட சில பாலட் வகை நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றதுடன் கற்றல் தவிர இதர கலைகளிலும் சிறந்த மாணவியாக வந்துள்ளார்.
பாட்டி அளித்த ஊக்கத்தினால் தனது ஏழாம் வயதில் இருந்து பரத்ஜி விட்டல் என்பவரிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்றுள்ளார். பாட்டியுடன் சேர்ந்து ஒரே மேடையில் நடனமாடும் அரிய வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார்.
‘நிருத்திய சங்கம்’ என்ற பெயரில் 68 வயது பாட்டியும் 13 வயது பேத்தியும் நடனமாடும் பரத நாட்டிய நிகழ்ச்சி பெங்களூர் நகரில் உள்ள சவுடையா நினைவு அரங்கத்தில் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது.
Spread the love