பிலிப்பைன்ஸின் கிழக்கு பகுதியில் உள்ள பிலிரான் தீவில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிரான் தீவுப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதுடன் புயலும் ஏற்பட்டுள்ளதனால் ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் குடியிருப்பு பகுதியில் பெரிய பாறைகள் விழுந்ததுடன் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு பேரிடர் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.