எகிப்தில் உள்ள அஸ்வான் நகரம் அருகே, மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 4 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுவீடன்-எகிப்து நாடுகளின் குழு கண்டெடுத்த சேதமடையாத இந்த புதைந்த எலும்புக்கூடுகள் ஒன்றில், அதனை பதப்படுத்துவதற்காக சுற்றப்பட்டிருந்த துணி இன்னமும் இருந்ததாக அந்நாட்டின் தொல்பொருள் துறை அமைச்சர் ஐமன் அஷ்மவி தெரிவித்தார்.
எகிப்தின் 18வது ராஜவம்சத்தில் (1549ஃ1550- 1292 கிமு) இந்த எலும்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளன. கல்லறையின் ஒரு பகுதியை எகிப்து-ஒஸ்ரியா நாடுகள் குழுவும், ஒரு பெண்ணின் சிலையை சுவிஸ் நாட்டின் ஆராய்ச்சி குழுவும் கண்டுபிடித்துள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கெப்பில் அல்-சில்சிலா என்ற தளத்தில் கண்டுபிடித்த முதலாவது புதையலில் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைக்காக கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கல்லறையும் காணப்படுள்ளது. அத்துடன் பதப்படுத்துவதற்காக சுற்றப்பட்டிருந்த துணியுடன், மரச் சவப்பெட்டியின் எஞ்சியுள்ள கரிமப் பொருளும் கண்டுபிடிக்கப்பட்டது.
கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது புதையலில், ஆறுலிருந்து ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைக்கான சவப்பெட்டியும் மூன்றாவதில் ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்கானதான பெட்டியும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டிலும் சில தாயத்துகள் மற்றும் மட்பாண்ட பொருட்களும் இருந்தன. நான்காவது புதையல் ஐந்திலிருந்து எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைக்கானதாகும்.
‘தட்மாசிட்’ என்றழைக்கப்படும் எகிப்தின் 18வது ராஜவம்ச காலத்தில் கடைபிடிக்கப்பட்ட இறுதி சடங்கு முறைகள், அக்காலத்து மக்களின் சமூகம், பொருளாதாரம் மற்றும் மத வாழ்க்கை குறித்து அதிகம் தெரிந்து கொள்ள இந்த புதிய கண்டுபிடிப்புகள் உதவும் என சுவீடன் ஆராய்ச்சி குழுவின் தலைவர் மரீயா நில்சன் தெரிவித்துள்ளர்h.
கெப்பில் அல்-சில்சிலா தளத்தில் இதுவரை 69 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பாதி கல்லறைகள் தோண்டி எடுக்கப்பட்டு விட்டதாகவும் மரீயா, பிபிசி செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்சிகளில் ஏற்கனவே பழங்காலத்தில் பாதி கல்லறைகள் சூறையாடப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், எகிப்தின் முதல் இடைநிலை காலத்தின் தேதியிட்ட கல்லறையின் ஒரு பகுதியை கொம் அம்போ நகரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த எகிப்து-ஒஸ்திரிய குழு கண்டுபிடித்துள்ளது. மண்- செங்கலால் ஆன கல்லறைகளில், மட்பாண்டங்கள் மற்றும் பல இறுதி சடங்குக்கான பொருட்கள் இருந்ததாக குழுத்தலைவர் ஐரீன் ஃபாஸ்டர் கூறினார்.
பழைய ராஜ்ஜிய (2613-2181 கிமு) காலம் தேதியிட்ட நகரத்தின் எஞ்சியுள்ள சில பாகங்கள், கல்லறைக்கு அடியே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு ஐந்தாவது வம்சத்து (2494-2345 கிமு) அரசர் சஹூரேவின் தோற்றமும் அதில் காணப்பட்டது.
கிரேக்க-ரோம சகாப்த காலத்தின் முழுமையடையாத சிலை ஒன்று அத்தளத்தில் மூன்றாவதாக கண்டெடுக்கப்பட்டது. இதனை அஸ்வான் என்ற இடத்தின் அருகே எகிப்து-சுவிஸ் ஆராய்ச்சிக் குழு கண்டுபிடித்தது.
35 சென்டி மீட்டர் உயரமான கால் மற்றும் வலது கையிழந்த தலையற்ற பெண்ணின் சிலை ஒன்று சுண்ணாம்புக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அணிந்திருந்த உடையானது, கிரேக்க பெண் கடவுளான ஆர்டேமிஸ் அணிந்திருக்கும் உடை போல் இருப்பதாக உள்ளூர் தொல்பொருள் தலைவர் அப்துல் மூனிம் சயித் தெரிவித்தார்.