குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாண மாநகர சபை வேட்பாளராக இமானுவேல் ஆனொல்ட் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் பிரேரிக்கப்பட்டுள்ளார் என கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘உள்ளூராட்சி சபைக்கான தலைமைப் பதவிகளுக்கு யார் யார்? என அறிவிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம்.
எனினும் இந்த விடயத்தில் அவர் ஒரு மாகாண சபை உறுப்பினர். அதனால் அந்தப் பதவியிலிருந்து அவர் உரிய நேரத்தில் விலகவேண்டியிருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை வேட்பாளராக ஆனொல்ட் பிரேரிக்கப்பட்டுள்ளார்.
எனவே அவர் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியை விலகியுள்ளார்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்தார். இந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் எழுந்த சர்ச்சையால், தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் இன்று மாலை அவசர அவசரமாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வழங்கினார்.
அதில்’ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மூன்றும் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் வடக்கு- கிழக்கிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தலைமைப் பதவிகளை தேர்தல் முடிவின் பின்பே அறிவிக்கப்படும். யாழ்ப்பாண மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இமானுவேல் ஆனொல்ட் களமிறங்குகிறார் என வெளியாகிய செய்தி உண்மைக்குப் புறம்பானது என அந்த அறிக்கையில் அவர் தெரிவத்திருந்தார்.
தமிழ் அரசுக் கட்சியின் செயலாளரின் அறிக்கை ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கட்சியின் அறிவிப்புப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ‘ மாகாண சபை உறுப்பினராக உள்ள ஒருவர் அந்தப் பதவியிலிருந்து விலகுவதனால்தான் அவருடை பெயர் யாழ்ப்பாண மாநகர மேயர் வேட்பாளராகப் பிரேரிக்கப்பட்டது என நான் தெளிவாக்க் குறிப்பிட்டேன்.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்தால் ஏனைய சபைகளில் போட்டியிடுவோர் மற்றும் எல்லோரும் யார் தலைமை வேட்பாளர் என சர்ச்சையை ஏற்படுத்துவார்கள்.
எனவே இந்த விடயத்தில் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்றுதான் தமிழ் அரசுக் கட்சி கேட்டுள்ளது. செயலாளரால் வெளியிடப்பட்ட அறிக்கையை நானும் இணைந்தே தயாரித்தேன்’ என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.