பி.பி.சி. வானொலி நிறுவனத்துக்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை பிரித்தானிய இளவரசர் ஹரி பதற்றத்துடன் பேட்டி கண்ட சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. பி.பி.சி. வானொலி 4 – அலைவரிசைக்காக பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசர் ஹரி கௌரவ நேர்காணலாளராக செயல்பட்டிருந்தார்.
இந்தநிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கனடாவின் டொராண்டோ நகரில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பராக் ஒபமாவை நேர்காணல் செய்யும் பொறுப்பு இளவரசர் ஹரிக்கு வழங்கப்பட்டிருந்தது. குறித்த நேர்காணலின் ஒரு பகுதியை இளவரசர் ஹரியின் கென்சிங்டன் மாளிகை தற்போது வெளியிட்டுள்ளது. வீடியோவாக வெளியாகியுள்ள இந்த பதிவில் ஜனாதிபதி பதவிக் காலத்தின் இறுதிநாளில் ஒபாமாவின் மனநிலை, ஓய்வுக்கு பிந்தைய அவரது எதிர்கால திட்டம் போன்றவற்றைப் பற்றி ஒபாமா மனம் திறந்துள்ளார்.
முன்னதாக, தன்னை பேட்டி காணவந்த ஹரியிடம் ‘நான் பொறுமையாக பேசக் கூடியவன். இந்த பேட்டிக்காக வேகமாக பேச வேண்டுமா? என்று ஒபாமா கேட்க – அதற்கான அவசியமில்லை என ஹரி கூறுகிறார். பின்னர் பிரித்தானிய ஆங்கில சாயலில் பேச வேண்டுமா? என சிரித்தபடி ஒபாமா கேட்க ஹரி பதற்றத்துடன் சமாளிக்கும் காட்சி இந்த முன்னோட்ட வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னரும் பிரித்தானிய அரச குடும்பத்தாருடன் ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் நெருக்கமாக பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமாவின் குறித்த நேர்காணல் எதிர்வரும் 27-ம் திகதி பி.பி.சி.வானொலி 4 – அலைவரிசையில் ஒலிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.