அமெரிக்க நேரப்படி திங்கள்கிழமை காலை வாஷிங்டன்னில் பயணிகள் புகையிரதம் ஒரு பாலத்தில் தடம் புரண்டதில் மூன்று பேர் இறந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். காயமடைந்த பலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வேறு யாராவது இந்த விபத்தில் இறந்து இருக்கிறார்களா என்று விபத்துக்கு உள்ளான ரயிலின் அனைத்து பெட்டிகளையும் நன்கு தேடிவிட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பாலத்திலிருந்து புகையிரதம் தடம் புரண்டு விழுந்ததால், அந்த பாலம் கீழே சென்ற வாகனங்களும் விபத்துக்கு உள்ளாகின. இரண்டு பாரஊர்திகள் உட்பட ஏழு வாகனங்கள் இந்த விபத்தில் சிக்கின. ஆனால், யாராவது அதில் இறந்து இருக்கிறார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த வழிதடத்தில் செல்லும் அம்ட்ராக் புகையிரதத்தில் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சியேட்டலில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 6 மணிக்கு புறப்பட்ட விபத்துக்கு உள்ளான ரயில் (501) போர்ட்லாண்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இந்த விபத்து டக்கோமாவின் தெற்கு பகுதியில் உள்ள வழிததடத்தில் ஏற்பட்டது. இந்த வழித்தடமானது முன்பு சரக்கு ரயில்கள் செல்ல மட்டும் உபயோகிக்கப்பட்டதாகும் .
தொங்கும் புகையிரதப் பெட்டி:
வாஷிங்டன் மாகாண காவல்துறை இந்த விபத்து தொடர்பான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு புகையிரதம் பெட்டி தொங்குவது போலவும், சில பெட்டிகள் சாலைகளில் விழுந்து கிடப்பது போலவும் காட்சி உள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.33 மணிக்கு இந்த ரயில் விபத்துக்கு உள்ளானதாக அம்ட்ராக் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
மேலும், அந்த புகையிரதத்தில் 77 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் பயணம் செய்ததாகவும் தெரிவித்தார். அமெரிக்க ஊடகங்களில் அந்த ரயிலிலிருந்தி உதவி கோரி புகையிரதத்தின் அவசர அழைப்பு சேவை மூலம் அழைத்த ஒருவரின் குரல் பதிவு வெளியிடப்பட்டுள்ளது அதில் அவர், “அவசரம்! நாங்கள் ஆபத்தான நிலையில் உள்ளோம்” என்கிறது அந்த குரல் பதிவு.
புகையிரத ஊழியர் செய்த அடுத்த அவசர அழைப்பில், அந்த ஊழியர், “ரயிலின் பின்பகுதி மட்டும்தான் தடத்தில் உள்ளது. மற்ற அனைத்து பெட்டிகளும் தடம்புரண்டு கீழே விழுந்துவிட்டது” என்கிறது.
டிரம்பின் ட்விட்:
இது தொடர்பாக டிரம்ப் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு, “இந்த விபத்தானது தன்னுடைய உள்கட்டமைப்பு திட்டம் ஏன் முக்கியாமான ஒன்று என்பதை காட்டுகிறது. நம் நாட்டின் சாலைகள், பாலங்கள் மற்றும் புகையிரத சேவை ஆகியவை மோசமாக உள்ள போது கடந்த காலங்களில் நாம் 7 டிரில்லியன் தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் செலவிட்டு உள்ளோம்” என்பதாக உள்ளது.
மாகாண ஆளுநர் ஜெய் இன்ஸ்லீ, காயமடைந்தவர்களுக்காக இறைவனை பிரார்த்திப்பதாக ட்விட் பகிர்ந்துள்ளார்.
சரிந்த பெட்டி, ஊற்றிய நீர்:
தடம் புரண்ட புகையிரதத்தில் பயணித்த கிரிஸ் கர்னெஸ், “எங்களால் ரயில் பெட்டி சரிவதை கேட்கவும் உணரவும் முடிந்தது. ரயிலின் மேல் கூரையிலிருந்து தண்ணீர் ஊற்றியது. நாங்கள் ரயிலில் இருந்து வெளியேற அவசர கால ஜன்னலை உதைக்க நேரிட்டது” என்கிறார்.இந்த ரயிலில் இயந்திரம் உள்பட 14 பெட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் 36 பயணிகள் பயணம் செய்யலாம். விபத்துக்கு உள்ளானபோது இந்த புகையிரதத்தில் 77 பயணிகள் இருந்தனர்.
Thanks – BBC